Karuveli, Thiruvarur District, Tamilnadu

கல்கி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் சிறந்த எழுத்தாளருமான திரு.ராஜேந்திரன் தந்தை ‘கல்கி’யின் கொள்கைகளை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார். தேச நலனுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் கல்கி பத்திரிகையை நடத்தி வருகிறார்.

– 1997 கும்பாபிஷேகத்தின் போது கல்கி திரு.கி.ராஜேந்திரன் எழுதியது

கும்பகோணத்திலிருந்து அரிசலாற்றங்கரையோடு செல்லும் சாலையில் பசுமைச் சூழலை ரசித்துக்கொண்டே சில கிலோமீட்டருக்கு போனால் கருவேலி என்ற ஒரு குக்கிராமத்தை அடையலாம். அது இன்று திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுற்று வட்டாரத்து கிராம மக்களெல்லாம் வண்டி கட்டிக்க கொண்டு குடும்பம் குடும்பமாக வந்து சேர்க்கிறார்கள். திடீர்க் கடைகளும் தண்ணீர்ப் பந்தல்களும் தோன்றியுள்ளன. அனைவரது முகங்களிலும் பெருமிதாப் பூரிப்பு காணப்படுகிறது.

காரணம் என்ன என்று விசாரித்தால் தங்கள் மண்ணின் மைந்தர்கள் பற்றிய பெருமிதம் தான் என்று தெரிய வருகிறது. வைத்தியநாதன், கிருஷ்ணமூர்த்தி என்ற சகோதரர்கள் எங்கோ சென்னையிலும் புதுதில்லியிலும் குடியேறியிருந்தாலும் சொந்தக் கிராமத்தை மறவாமல் அங்கு சிதிலமான கோயிலுக்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் நடத்தி வைக்க முன் வந்தார்கள்.

கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க திருவாவடுதுறை இளைய சந்நிதானம் சீர்மிகு காசி விசுவநாத தேசிகர் வந்திருக்கிறார். யாகசாலையில் முறைப்படி எல்லா யக்ஞங்களும் நடந்து முடிந்தது. அபிஷேக தீர்த்தத்தைத் தலையில் சுமந்து கோயிலை வளம் வந்து கோபுரத்தின் மேல் சாரங்கள் வழியே ஏறுகிறார்கள். இனிய நாதஸ்வர இசை வெயிலைக்கூட மறக்கச்செய்கிறது. ‘ஹர ஹர மகாதேவா’ என்ற பக்தர்களின் கோஷத்துக்கிடையில் கலசாபிஷேகம் நடக்கிறது.

கோயில் பிரகாரம், கோபுரம் எல்லாம் புதுக்கருக்குடன் பளிச்சிடுகின்றன. இத்தனை சிறப்பாகத் திருப்பணியை நடத்திக் கொடுத்திருக்கும் சிவப்பிரகாச ஸ்தபதியை வாழ்த்தாதவர்கள் கிடையாது. ‘இவர் ஸ்ரீரங்கம் ராஜ கோபுர திருப்பணியையே நடத்தி வைத்தவராக்கும்’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் வசூலித்து விடலாம்; ஸ்தபதி வந்து திருப்பணியை மேற்பார்வையிட்டு நடத்திக் கொடுத்து விடலாம்; ஆனால் ஊர் மக்கள் ஒத்துழைப்பு இன்றி என்ன செய்து விட முடியும்? அவர்கள் ஒரு கணிசமான தொகையைத் தாங்களே திரட்டித்த தந்தது பெரிய விஷயமல்ல; திருப்பணி நடந்து முடிந்த கோயிலை நன்கு பராமரித்து நித்தியா பூஜைகள், உற்சவங்கள் எல்லாம் குறைவின்றி நடத்தி வருவதாக உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

கும்பாபிஷேகம் காண வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள். பக்கத்துக் கூந்தலூர் கிராமத்தில் இரண்டு மீன்று வீடுகளில் தொடர்ந்து நாலைந்து நாட்களுக்கு மூன்று வேலையும் விருந்துபசாரங்கள்.

எங்கேயிருந்து பெற்றார்கள் இந்த நற்குணத்தை என்பது சுவாமி சந்நிதியில் நுழைந்ததுமே புரிந்து போகிறது. சர்குணம் என்பது எவ்வளவு பறந்து உயர்ந்தது என உணர்த்தும் விதமாக சற்குணநாதர் நெடி துயர்ந்து கம்பீர சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். அம்மன் பெயர் அதைவிட அழகானது; சர்வாங்கசந்தரி. புற அழகும் அக அழகும் இணைபிரியாதிருக்க வேண்டும் என்று உணர்த்துவது போன்று அம்பாளும் இறைவனும் திருப்பெயர் பூண்டிருக்கிறார்கள்.